Monday, December 29, 2008

495. உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள் - TPV14

திருப்பாவை பதினான்காம் பாடல்

எங்களை எழுப்புவதாகச் சொல்லிவிட்டு, அவ்வண்ணம் செய்யாது உறங்குதல் முறையோ?

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கல்பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்
நங்காய்! எழுந்திராய்! நாணாதாய்! நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோரெம்பாவாய்.


பொருளுரை:

உங்கள் வீட்டு புழக்கடைத் தோட்டத்தில் உள்ள சிறுகுளத்தில் செங்கழுநீர் மலர்கள் இதழ் விரிந்து, கருநெய்தல் மலர்கள் இதழ் குவிந்து (அழகாக) இருப்பதை காண்பாயாக! செங்கல் நிறத்தில் உடை (காவியுடை) தரித்த, வெண்மையான பற்களையுடைய தவசிகள், சங்கை முழங்கி அறிவித்தவாறு, தங்கள் திருக்கோயில்களைத் திறக்கச் செல்லுகின்றனர்.

அழகிய பெண்ணே! எங்களை முன்னரே எழுப்புவதாக நீ எங்களுக்கு வாக்களித்து விட்டு,அவ்வண்ணம் செய்யாமலிருந்தும், செய்யவில்லையே என்ற வெட்கம் துளியும் இல்லாதவளே! இனிமையான துடுக்கான பேச்சுடையவளே! துயிலெழுவாயாக! சங்கு, சக்கரம் தரித்து, விசாலமான திருக்கைகளையுடையவனும் தாமரை மலர் போன்ற சிவந்த கண்களையுடையவனுமான கண்ணபிரானின் பெருமைகளைப் பாடி நோன்பிருக்க வருவாயாக!

பாசுரச் சிறப்பு:

வெட்கத்துக்குரிய தவறுகளை இழைத்தவர் கூட, கண்ணனைச் சரணடைந்து அவனிடம் முநறயிட்டு, அவன் அருளுக்குப் பாத்திரமாக முடியும் என்பது இப்பாசுரத்தின் ஒரு செய்தி. மற்ற கோபியர்களை எழுப்புவதாகச் சொல்லிவிட்டு, அவ்வண்ணம் செய்யாமல் உறங்கிக் கொண்டிருக்கும் பெண்ணைக் கூட ஆண்டாள், கண்ணன் புகழைப் பாட அழைப்பதிலிருந்து பாசுரத்தின் செய்தியை உணரலாம்!

அப்பெண் உண்மையில் உறக்கத்தில் இல்லை, தியானத்தில் உள்ளாள்! இரவா, பகலா என்று உணராமல் கிருஷ்ணானுப ஆனந்தத்தில் திளைத்திருக்கிறாள் !!!

அத்துடன், துயிலெழுப்பப்படும் கோபியர் குலப் பெண் துடுக்காகவும், அதே சமயம் இனிமையாகவும் பேசுவதில் கை தேர்ந்தவள்! கண்ணனிடம் இனிமையாகப் பேசி வசியப்படுத்தி, தாங்கள் வேண்டிய வரங்களை கண்ணனிடமிருந்து பெற்றுத் தரும் சாதுர்யம் (உறங்கும்) பெண்ணிடம் உள்ளதாக மற்ற கோபியர் நம்பினர்! அதனாலேயே, அக்கோபியர் (தங்களை எழுப்புவதாகச் சொல்லி அப்பெண் ஏமாற்றியிருந்தாலும்!) அப்பெண்ணின் மீது மெல்லிய கோபத்தில் (நாணாதாய், நாவுடையாய்!)இருந்தாலும் அவளை தங்களுடன் கூட்டிச் செல்வதில் மிக்க ஆர்வமாக இருந்தனர் :-)

அது போலவே, "நாவுடையாய்" என்று ஆண்டாள் பாடியதில் ஓர் உள்ளர்த்தம் உள்ளது. அதாவது, நாக்கு என்பது உண்பதற்கும், வீண் பேச்சு பேசுவதற்கும் அல்ல, அதன் முக்கியப் பணி பரமனின் திருநாமங்களைப் பாடுதலும், நல்ல விஷயங்களைப் பிறர்க்குச் சொல்லுதலும் என்பதை கோதை நாச்சியார் வலியுறுத்துகிறார்!

கர்ம பலன் என்பது மனம், வாக்கு, செயல் என்ற மூன்றைச் சார்ந்தது அல்லவா? உறங்கும் கோபி நல்ல நா உடையவள் என்பதால், வாக்குத் தூய்மையும், அதற்கு காரணமான உள்ளத் தூய்மையையும் அடைந்து விட்டவள் என்பது தெளிவு. அவள் செய்யவேண்டியது, பூரண சரணாகதிக்கான "செயலை" அனுசரிப்பது மட்டுமே!

"நங்காய்" என்பது அப்பெண்ணின் பெருஞ்சிறப்பைப் பேசுகிறது. எப்படி, உத்தமமும் ஞானமும் மிக்க ஆண்வர்க்கத்தினரை "நம்பி" (பெருமாளே நம்பி தானே!) என்று அழைக்கிறோமோ, அரிய ஞானமும், குணச் செல்வங்களும் பெற்ற மகளிரை "நங்கை" என்று குறிப்பிடுகிறோம். உறங்கும் கோபி அத்தகைய நங்கை என்பதை உணர்க!

மேலும், பிரத்யட்சம், அனுமானம், சப்தம்(சாத்திரம்) என்ற மூன்று பிரமாணங்களும் இப்பாசுரத்தில் சொல்லப்பட்டுள்ளன.

பிரமாணம் என்பதை ஞானத்தின் ஊற்று, ஞானம் பெறப்படும் இடம் அல்லது ஞானத்தைத் தரும் வழிவகைகள்/விஷயங்கள் என்று கொள்ள வேண்டும். பிரமேயம் என்பது பிரமாணத்தால் அறியப்படும் பொருள் என்று அர்த்தம். பிரமாணத்தைக் கடைபிடிப்பவன் பிரமாதா ஆகிறான்.

சப்தப் பிரமாணம் என்பது வேதம் அல்லது ஸ்ருதியைச் சார்ந்தது. வேதத்தை இயற்றியவர் என்று யாரும் கிடையாது. வியாசர் வேதத்தை நான்காக வகுத்து சாரப்படுத்தினார். இதுவே குறைவில்லாத பிரமாணம்.

பிரத்யட்சம் (புலன்களால் உணரப்படும்) மற்றும் அனுமானம் (Inference based onobservation) என்ற 2 பிரமாணங்களும் குறையுடையவையே.

"உங்கள் புழைக்கடை" என்பது அனுமான பிரமாணம்
"தவத்தவர் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்" என்பது பிரத்யட்ச பிரமாணம்
"எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும் நங்காய்!" என்ற ஆப்த வாக்கியம் (சப்தம்) சாத்திரப் பிரமாணமாம்.


உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து - உலகப் பற்றுகளில் உழன்று கொண்டிருக்கும் ஒருவனுக்கு ஞானம் துளிர்க்கத் தொடங்குவது உள்ளர்த்தமாம்

ஆம்பல்வாய் கூம்பினகாண் - காமம், குரோதம் போன்ற அஞ்ஞானம் சார் உணர்வுகள் விலகின

செங்கல்பொடிக்கூறை வெண்பல் தவத்தவர் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார் - மிக்க ஞானமுடைய ஆச்சார்யனின் சம்பந்தம் ஏற்படப் போவதை குறிப்பில் உணர்துவதாம்.

எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும் நங்காய்! எழுந்திராய்! - நாங்கள் சம்சார பந்தம் என்ற நித்திரையிலிருந்து வெளிவர உத்தம் அதிகாரியான நீயே அருள வேண்டும்!

நாணாதாய் - நாணம் என்பது தன்னடகத்தை மட்டும் குறிப்பதாகாது, அது அகங்காரத்தையும் குறிப்பதாம். அதனால், அகங்கார-மமகாரங்கள் அற்றவள் அப்பெண் என்பதால், "நாணாதாய்" என்ற பதம் அவளுக்கு பொருத்தமே!

நாவுடையாய் - சகல சாத்திரங்களையும், வித்தையையும் பேசும் (நல்வாக்கு அருளும் ஹனுமன், உடையவர் போன்ற) சான்றோர் அனைவரும் நாவுடையவரே! அதனால், இதுவும் உறங்கும் பெண்ணின் சிறப்பையே சொல்கிறதாக அன்னங்கராச்சார் சுவாமிகள் கூறுவார்.

சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய் - சங்கும் சக்கரமும் பரமனது பரத்துவத்தை உணர்த்துவதாம். பெருமானை உபாசனை செய்யும் மார்க்கத்தை உபதேசிக்க வேண்டுவது என்பது உள்ளுரை.
**********************************************

இப்பாசுரம், திருப்பாணாழ்வாருக்கான ஆண்டாள் பாடிய திருப்பள்ளியெழுச்சி என்று சொல்வது ஐதீகம். இதற்கான விளக்கத்தைப் பார்ப்போம்.

"நங்காய் நாணாதாய் நாவுடையாய்" என்பது திருப்பாணருக்கு மிகவும் பொருந்தும். மேலே சொன்னபடி, முழுமையான நற்குணங்களும், ஞானமும் கொண்ட திருப்பாணரை "நங்காய்" என்று ஆண்டாள் விளிக்கிறார்! அதனால் தானே, லோகசாரங்க முனியே திருப்பாணரை தன் தோளில் சுமந்தபடி அரங்கனை தரிசிக்க கூட்டிச் சென்றார்!

மேலும், "செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்" என்பது இங்கு லோக சாரங்க முனியைக் குறிப்பில் உணர்த்துவதாம்!

அப்படி அவரை தோளில் தூக்கிச் சென்றபோதும் கூட தன் பக்தியின் மீது கர்வம் கொள்ளாமல், "அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன்" என்று பாடிய திருப்பாணரை "நாணாதாய்" (அகங்காரமின்மை) என்று கோதை நாச்சியார் போற்றுகிறார்.

சுவாமி தேசிகன் திருப்பாண் பெருமாள் பற்றி, "பாண் பெருமாள் பாடியதோர் பாடல் பத்தும்பழமறையின் பொருளென்று பரவுமிங்கள்" என்று சொல்லியதிலிருந்தே, திருப்பாணாழ்வார் தனது பத்து பாசுரங்கள் (அமலனாதிபிரான்) வாயிலாக வேத சாரத்தையே சொன்ன பெருந்திறன் வாய்த்தவர் என்பது புரிகிறது. ஆண்டாள் அவரை "நாவுடையாய்" என்றழைப்பதில்என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?

திருப்பாண் பெருமாள் தனது அமலானாதிபிரான் பாசுரங்களில் சங்கு சக்கரமேந்திய பெருமாளின் கோலம் பற்றியும், அரங்கனின் திருக்கண்கள் பற்றியும் பாடியிருப்பதை கவனிக்க வேண்டும்.

"கையினார் சுரிசங்கனல் ஆழியர்" என்றும்
"கரியவாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்டவ பெரியவாய கண்கள் என்னை பேதைமை செய்தனவே" என்றும் இரு பாசுரங்களில் வருகின்றன.

சூடிக் கொடுத்த நாச்சியார் அதை மனதில் கொண்டு, "சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்பங்கயக் கண்ணானைப் பாட" என்று அதே போன்ற வர்ணனையை கையாள்கிறார் !!!

"எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும் நங்காய்!" என்பதை திருப்பாணருடன் தொடர்புபடுத்தும்போது ஒரு சுவாரசியமான அர்த்தம் கிடைக்கிறது :)

அதாவது, "அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன்" என்று தன்னை அடியார்க்கு அடியாராக வரிந்து கொண்ட திருப்பாணரையே லோகசாரங்க முனி தான் அரங்கனிடத்துக்கு தன் தோளில் சுமந்து (பாணர் அதை விரும்பாவிட்டாலும், அரங்கனின் கட்டளை அது என்பதால்)சென்றார்! அடியார்க்கு அடியார் எனும்போது திருப்பாணரன்றோ லோகசாரங்கரை தூக்கிச்செல்ல வேண்டும்!

அதனால் தான் என்னவோ, திருப்பாணர் தான் பாடியபடி நடக்கவில்லை என்பதை, "எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும் நங்காய்!" என்று பாடி, இப்பாசுரத்தில் ஆண்டாள் விளையாட்டாய் சுட்டிக் காட்டுகிறாள்! இங்கு, "எங்களை" என்பது அடியவரையும், "எழுப்புவான்" என்பது "சுமந்து செல்வதையும்", "வாய் பேசும்" என்பது நடக்காத ஒன்றை வாய் வார்த்தையாக சொல்வதையும் குறிப்பில் உணர்த்துகிறது :)

சில குறிப்புகள்:

செங்கழுநீர் = Nymphaea odorata = fragrant (day) water lily. இதில் பல நிறங்கள் (ரோஸ், காவி, மஞ்சள், வயலட்) உண்டு.

அது போல, ஆம்பல் = Nymphaea lotus = white (night) water lily

எ.அ.பாலா

கறுப்புவெள்ளை ஓவியம் நன்றி: தேசிகன்.காம்

3 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

test !

உயிரோடை said...

வ‌ழ‌க்க‌ம் போல் சிற‌ப்பாக‌ வ‌ந்திருக்கின்ற‌து.

நாவுடையாய் என்ப‌த‌ற்கு தந்திருக்கும் ப‌ல்முனை விள‌ங்க‌ள் அருமை

திருப்பாணாழ்வாருக்கான ஆண்டாள் பாடிய திருப்பள்ளியெழுச்சி த‌ந்திருக்கும் ஆத‌ர‌ங்க‌ள் அற்புத‌ம்.

"இன்னும் ஒரு நூற்றாண்டு இரும்" பாவை ப‌திவுக‌ள் முடிக்கும் அன்று சொல்ல‌ இருந்த‌தை இன்றே சொல்லிவிட்டேன். :)

ஆண்டாள் அர‌ங்க‌ன் திருவ‌டிக‌ளே ச‌ர‌ண‌ம்

enRenRum-anbudan.BALA said...

மின்னல்,
தினம் வந்து வாசிப்பதற்கும், வாழ்த்துக்கும் நன்றி!

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails